Thursday, November 9, 2017

நவம்பர் 12, 2017

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஞானமுடையோரே,
  
பொதுக்காலத்தின் முப்பத்திரண்டாம் ஞாயிறு கொண்டாட்டத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஆண்டவரின் வருகைக்காக தயார் நிலையில் இருக்குமாறு இன்றைய திருவழிபாடு நம்மைப் பணிக்கிறது. உலக முடிவு எப்போது நிகழும் என்று நமக்கு தெரியாது என்றாலும், கடவுளுக்கு கணக்கு கொடுக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக விழிப்போடு காத்திருக்க வேண்டும் என இயேசு நமக்கு இன்று கற்று தருகிறார். இறையாட்சி விருந்தில் பங்கேற்கத் தகுதி பெற விழிப்புடன் செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஞானமுடையோரே,
   இன்றைய முதல் வாசகம், ஞானத்தின் ஒளியை நாடிச் செல்லுமாறு நமக்கு அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். ஞானத்தை நாடுவோர் அதை விழிப்புடன் தேட வேண்டுமென அறிவுரை வழங்குகிறது. ஞானம் நம்மை கவலையில் இருந்து விடுவிக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோம். கடவுளின் அருளைப் பெற ஞானத்தோடு செயல்படும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஞானமுடையோரே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஆண்டவரின் வருகை குறித்த தெளிவை திருத்தூதர் பவுல் நமக்கு வழங்குகிறார். நாம் உயிரோடு இருக்கும்போதே ஆண்டவரின் வருகை நிகழலாம் என்ற உண்மையை உணர அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். எக்காளம் முழங்க ஆண்டவரின் வருகை நிகழும்போது, அவரை எதிர்கொள்ளத் தயாராய் இருக்க வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வானக அரசரே இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறையாட்சி நெறியில் மக்களை வழிநடத்தவும், உம் திருமகனின் வருகைக்கு தயார் செய்யவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகிழ்ச்சி தருபவரே இறைவா,
   உலக மக்கள் அனைவரும் நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்து மனந்திரும்பவும், உம் திருமகனின் வருகைக்காக தங்களைத் தயாரிக்கவும் அருள் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் உறைவிடமே இறைவா,
   எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் உமது மாண்பை உணர்ந்து கொள்ளவும், உமது நீதித் தீர்ப்புக்கு பயந்து நேர்மையாக ஆட்சி செய்யவும் தூண்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. குணம் அளிப்பவரே இறைவா,
   உலக நாட்டங்களாலும், உடல் இச்சைகளாலும் பாவத்தில் உழலும் மக்கள் அனைவரும், உமது இரக்கத்தால் மனந்திரும்பி, ஞானத்தோடு உம்மை எதிர்கொள்ள அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் மீட்பரே இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம் திருமகனின் இறையாட்சி விருந்துக்கு விழிப்புடன் எங்களைத் தயாரிக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.