Thursday, November 16, 2017

நவம்பர் 19, 2017

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
  
பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுள் நமக்கு வழங்கிய ஒவ்வொரு பணியையும் எப்படி நிறைவேற்றினோம் என்பதற்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு நினைவூட்டுகிறார். ஆண்டவரின் திட்டத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கை அமைந்துள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்க நம்மை அழைக்கிறார். ஆண்டவரிடம் பரிசு பெறும் வகையில் விழிப்புடன் செயல்பட வரம் கேட்டு, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கணவரின் நம்பிக்கையை வீண்போக விடாத திறமையுள்ள மனைவியைக் குறித்து எடுத்துரைக்கிறது. இதன் வழியாக, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரிய மணவாட்டிகளாக செயல்பட நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உண்மை உள்ளவர்களாய் வாழ்ந்து, அதற்கான நற்பயனை அடையும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரின் வருகைக்காக நாம் விழிப்போடு இருக்குமாறு அறிவுரை வழங்குகிறார். அனைத்தும் அமைதியாக இருப்பதாக எண்ணும் வேளையில், திருடனைப் போன்று ஆண்டவரின் வருகை நிகழும் என்று எச்சரிக்கிறார். இருளின் வழிகளில் இருந்து விலகி, ஒளியின் மக்களாக எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விண்ணகத் தந்தையே இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப் பெற்ற பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி, இவ்வுலகில் இறையாட்சியை நிறுவ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. மகிமையின் மன்னரே இறைவா,
   உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து, பொருளாதார தேவைகளை நிறைவு செய் பவர்களாய் வாழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மேன்மை நிறைந்தவரே இறைவா,
   சாதி, மதம், இனம், மொழி என்ற பாகுபாடுகளால் பிளவுபட்டுள்ள எம் நாட்டு மக்கள் அனைவரும், நீர் ஒருவரே உண்மை கடவுள் என்பதை உணர்ந்து, உமது விருப்பத்தை நிறைவேற்ற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நலம் அருள்பவரே இறைவா,
   சோம்பல், ஆர்வமின்மை போன்ற காரணங்களால் நீர் வழங்கிய திறமைகளை சரியாக பயன்படுத்தாமல் வாழும் அனைவரும், மனந்திரும்பி பொறுப்புடன் செயல்பட  உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் நம்பிக்கையே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, உம் திருமகனிடம் இருந்து பரிசு பெறும் வகையில் விழிப்புடன் செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.