Wednesday, November 1, 2017

நவம்பர் 5, 2017

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இயேசுவின் பணியாளர்களே,
  
பொதுக்காலத்தின் முப்பத்தோராம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் நாம் பணிவுடன் வாழ அழைப்பு விடுக்கிறது. 'கடவுள் மட்டுமே நம் தலைவர்; நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்' என்ற உண்மையை உணர்ந்து வாழ ஆண்டவர் இயேசு நமக்கு இன்று கற்று தருகிறார். வெளிவேடங்களைத் தவிர்த்து கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்தால் மட்டுமே விண்ணக வாழ்வைப் பெற முடியும் என்பவை அவர் நினைவூட்டுகிறார். உண்மைக்கும் நீதிக்கும் மதிப்பளித்து பணிவுடன் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம். 

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப் பெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், கடவுளுக்கு உண்மையாக நடக்காத குருக்களை ஆண்டவர் கண்டிப்பதைக் காண்கிறோம். தவறு செய்த சமயத் தலைவர்களின் ஆசிகளை சாபமாக மாற்றி விட்டதாக இறைவாக்கினர் மலாக்கி வழியாக ஆண்டவர் கூறுகிறார். கடவுளை நோக்கி மக்களை வழிநடத்த தவறிய சமையத் தலைவர்களின் நிலை தாழ்த்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கிறார். நமது குருக்களுக்கு கடவுளின் அருள் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப் பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் தமது தலைமைப் பண்பு குறித்து தெசலோனிக்க மக்களுக்கு விளக்கம் அளிக்கிறார். இறையாட்சி பணி செய்யும் ஒவ்வொருவரும், அவரைப் பின்பற்றி கனிவுடன் வாழ அழைக்கப்படுகிறோம். இறைவார்த்தையைக் கேட்கும் நாம் அனைவரும், கடவுளுக்கு விருப்பமான செயல்களை செய்கிறவர்களாய் வாழும் அருள் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விண்ணகத் தந்தையே இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த வழியில் இறைமக்களை வழிநடத்தி, உமது ஆசிகளை நிறைவாக வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாற்றம் தருபவரே இறைவா,
   உலகெங்கும் நிகழும் வன்முறைகளும் அடக்குமுறைகளும் முடிவுக்கு வரவும், மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வில் வளர்ச்சி காணவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் நாயகரே இறைவா,
   உண்மையும் நேர்மையுமற்ற அரசியல் தலைவர்களால் எங்கள் நாட்டு மக்கள் சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளும் பிரச்சனைகளும், விரைவில் முடிவுக்கு வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நலம் நல்குபவரே இறைவா,
   பகட்டாலும் வெளிவேடத்தாலும் மன நிம்மதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், நீர் விரும்பும் வகையில் பணிவுடன் வாழ்ந்து நலம் அடைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் தலைவரே இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் ஒருவருக்கொருவர் பணி செய்கிறவர்களாக வாழவும், உமது வழியில் நிலைத்திருக்கவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.