Thursday, November 30, 2017

டிசம்பர் 3, 2017

திருவருகை காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   திருவழிபாட்டு நாள்காட்டியின் புத்தாண்டு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம். திருவருகை காலத்தின் முதல் ஞாயிறாகிய இன்று, ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். வெளியூர் பயணம் சென்றிருக்கும் வீட்டுத் தலைவரின் வருகைக்காக காத்திருக்கும் பணியாளரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்குமாறு இன்றையத் திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. ஆண்டவரின் வருகையின்போது பாராட்டு பெறும் வகையில் விழிப்புடன் வாழ வரம் கேட்டு, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கும் இஸ்ரயேல் மக்களின் ஏக்கத்தை எடுத்துரைக்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு எருசலேமுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள், புதுவாழ்வு தரும் ஆண்டவரின் வருகைக்காக கூக்குரலிடுவதைக் காண்கிறோம். மலைகளையும் உருகச் செய்கின்ற மாட்சிமிகு ஆண்டவரின் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், ஆண்டவரின் நட்புறவில் பங்குபெற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். கிறிஸ்து இயேசுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிற ஒவ்வொருவரும், இறையருளில் நிலைத்திருக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்துகிறார். ஆண்டவர் தோன்றும் நாளில், குறைச் சொல்லுக்கு ஆளாகாதவர்களாய் அவர் முன் நிற்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி மடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விழித்திருக்க அழைப்பவரே இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக உலக மக்களைத் தயார் செய்யும் ஆர்வத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லமை தருபவரே இறைவா,
   போர்களாலும், வன்முறைகளாலும் நிறைந்திருக்கும் இந்த உலகை, உமது வருகைக்கு ஏற்ற இடமாக மாற்றுகின்ற வரத்தை, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒன்று சேர்ப்பவரே இறைவா,
  
எம் நாட்டு மக்கள் தவறான சமய நம்பிக்கைகளில் இருந்து விலகவும், உண்மை இறைவனாகிய உம்மை அறிந்து உம்மைத் தேடி வரவும் அருள் புரிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டுபவரே இறைவா,
   தீயோனின் வழியில் பயணிக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, உமது அருளின் ஆட்சிக்குரிய இயல்பை பெற்றுக்கொள்ள உதவிவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அனைத்துலக அரசரே இறைவா,
   இயேசுவின் வருகைக்காக விழிப்புடன் காத்திருப்பவர்களாய் வாழும் வரத்தை, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வழங்கி பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.