Wednesday, May 2, 2012

மே 6, 2012

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனில் இனியவர்களே,
   திராட்சைச் செடியாம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நமது வாழ்வு இறைவனோடு இணைந்ததாக இருக்க வேண்டுமென்று இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டு கிறது. திராட்சைச் செடியாகிய இயேசுவோடு இணைந்த கொடிகளாக இருந்து, பலன் தருமாறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இறைவனின் அழைப்பை உணர்ந்தவர்களாய், இறையன்பில் நிலைத்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இனியோரே,
   இன்றைய முதல் வாசகம், கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்த சவுல், இயேசுவோடு இணைந்தது பற்றிய செய்தியை நமக்கு தருகிறது. எருசலேம் கிறிஸ்தவர்கள் சவுலை ஏற்க மறுத்தபோது, பர்னபா அவருக்கு துணை நிற்கிறார். இயேசுவில் இணைந்து பலன் தந்த பவுலைப் போல, நாமும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழும்
வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியோரே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நமது அன்பை செயலில் வெளிப்படுத்த அழைப்பு விடுக்கிறது. குற்றமற்றவர்களாய் வாழும்போது, நாம் கடவுளின் திருமுன் உறுதியான நம்பிக்கையுடன் நிற்க முடியும் என்று
திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களாய், மற்றவர்களை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வழிகாட்டுபவராம் இறைவா,
  
திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறை மக்களை உமது அன்பில் இணைந்து வாழுமாறு வழிநடத்தும் அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. துணையாளராம் இறைவா,
   உமது அன்பைப் புறக்கணித்து, தங்கள் மன விருப்பங்களுக்கு ஏற்ப தன்னலத்தோடு வாழும் மக்கள் அனைவரும், உமது திருமகன் வழியாக உம்மில் நம்பிக்கைகொள்ள துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. இணைப்பாளராம் இறைவா,
   எங்கள் நாட்டில் பெருகிவரும் லஞ்சம், ஊழல், வன்முறை, தீவிரவாதம் போன்றவை மறைந்து,
மக்கள் அனைவரும் அன்பினால் ஒன்றிணைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிப்பவராம் இறைவா,
   உலகில் தீய குணங்களாலும், தீயப் பழக்கங்களாலும், நோய்களாலும், மன அமைதி யின்றி வாழ்வோர் அனைவருக்கும் உமது அன்பினால் ஆறுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. மகிழ்வளிப்பவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவுடன் இணைந்த திராட்சைக் கொடிகளாய் வாழ்ந்து, உமக்கு ஏற்ற வகையில் பல
ன்தர உமது அருள் வரங்களை எம்மில் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.