Friday, September 28, 2012

செப்டம்பர் 30, 2012

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எண்ணிக்கை 11:25-29 
   அந்நாள்களில் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்ய வில்லை. இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை. ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், "எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்'' என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, "மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத் தும்'' என்றார். ஆனால் மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகி றாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்க ளுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!'' என்றார். பின் மோசேயும் இஸ்ர யேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 5:1-6
   செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண் டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்ட வருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந் தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர் மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

நற்செய்தி வாசகம்: மாற்கு 9:38-48
   அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார். அதற்கு இயேசு கூறியது: "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெய ரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத் தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நர கத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, September 26, 2012

செப்டம்பர் 30, 2012

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். நமது பாவ இயல்புகளைக் களைந்துவிட்டு கடவு ளுக்கு உரியவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உண்மை கடவுளை அறிந்துகொள்ளாத மற்றவர்கள் முன்னிலையில், கடவுளுக்கு சான்று பகர்பவர்களாக வாழவும், கிறிஸ்துவின் பெயரால் நற்செயல் புரிவோரை ஏற்றுக்கொள்ள வும் நாம் அழைக்கப்படுகிறோம். நமது உடல் உறுப்புகளைக் கொண்டு பாவம் செய்வதை விட, அவற்றை வெட்டி எரிந்துவிடுவதே நல்லது என்ற கடுமையான வார்த்தைகள் இயேசுவின் வாயில் இருந்து புறப்படுவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்களாய், புனிதமான வாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் மோசேயைத் தவிர, கடவுளின் ஆவியைப் பெற்ற மேலும் எழுபது பேர் இறைவாக்கு உரைத்ததைப் பற்றி எடுத்துரைக்கிறது. அவர்களில் இருவர் பாளையத்தில் இறைவாக்கு உரைத்ததைக் கண்டு, அவர்களைத் தடுத்து நிறுத்துமாறு யோசுவா மோசேயிடம் கேட்பதைக் காண்கிறோம். மோசேயோ கடவுளின் திட்டத்தில் நாம் குறுக்கிடக்கூடாது என்பதை உணர்த்தும் பதிலை அளிக்கிறார். கடவுளின் திட்டத்தை சரியாக உணர்ந்து வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, தீய வழியில் செல்வம் சேர்ப் போரின் இழிநிலையைப் பற்றி எடுத்துரைக்கிறார். பிறருடைய உழைப்புக்குரிய ஊதியத் தினை வழங்காமல், அதில் சேர்த்த செல்வத்தைக் கொண்டு வாழ்வோருக்கு கேடு விளை யும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இவ்வுலக செல்வமும், ஆடம்பர வாழ்வும் நிலையற் றவை என்பதை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறார். உலகப் பொருட்களாலும், இன்பங் களாலும் மயங்கிவிடாமல், கடவுளுக்கு உரியவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. புனிதத்தின் ஊற்றாம் இறைவா, 
   உமது திருச்சபையின் வழிகாட்டிகளாக நீர் தேர்ந்தெடுத்துள்ள எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இவ்வுலகின் தீய வழிகளில் இருந்து விலகி, புனிதம் நிறைந்த வாழ்வு வாழத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. இறைவாக்கினரை உருவாக்குபவராம் இறைவா,
  உமது திருச்சபையின் மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளுக்கு சான்று பகரும் இறைவாக்கினர்களாய் திகழ்ந்து, உலக
மக்களை மனந்திருப்பத் தேவையான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்க  வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அற்புதங்கள் நிகழ்த்துபவராம் இறைவா,
 
உண்மை கடவுளாகிய உம்மைப் புறக்கணித்து வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உமது மேலான வல்ல செயல்களாலும், அகத் தூண்டுதலாலும் உம்மை அறிந்து ஏற்றுக் கொள்ளத் தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. விடுதலை அளிப்பவராம் இறைவா,
   உலக மக்களிடையே நிலவும் தீய நாட்டங்கள், பயங்கரவாதப் போக்குகள், வன்முறை ஆர்வங்கள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவற்றைக் களைந்து, நீதியும்
அன்பும் அமை தியும் நிலவும் சூழல் உருவாக உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. தூய்மையின் பிறப்பிடமாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது ஆவியைப் பெற்றவர்களாய் தூய வாழ்வு வாழ்ந்து, பிறர் முன்னிலையில் உமக்கு சான்று பகரும் இறைவாக்கினர்களாய் திகழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, September 21, 2012

செப்டம்பர் 23, 2012

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 2:12,17-20 
   பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது: 'நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண் டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். நீதிமான்க ளுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்க ளுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவி னைக் கண்டு கொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன் புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடு வோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.'
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 3:16-4:3
   அன்பிற்குரியவர்களே, பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்ப மும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலை யாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள் ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. உங்களிடையே சண்டை சச்ச ரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக் கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவுகள் உண்டாக்கு கிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கி றீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 9:30-37
   அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழு வார்'' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்க ளுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர் கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார். அவர் கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன் னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட் டும்'' என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, September 19, 2012

செப்டம்பர் 23, 2012

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் பணிவுடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளுக்கு உகந்த பணி யாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. எத்தனை இடையூறுகளும் துன்பங்க ளும் வந்தாலும் எப்பொழுதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாக செயல்பட நாம் அழைக் கப்படுகிறோம். நீதிமான்களுக்கு எதிராக எத்தனை பேர் சூழ்ச்சி செய்தாலும் கடவுள் அவர் களுக்கு துணை நிற்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். நம்மில் இருக்கும் தீய நாட்டங்களுக்கு இடம் கொடுக்காமல், இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாய் வாழ நாம் அழைப்பு பெற்றுள்ளோம். நம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில் நம்மை இழந்துவிடாமல், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியாளர்களாக செயல்படும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் நீதிமான்களுக்கு எதிராக பொல்லாதவர்கள் செய்கிற சூழ்ச் சியைப் பற்றி எடுத்துரைக்கிறது. நாம் கடவுளுக்கு உகந்த நீதிமான்களாக வாழ்ந்தால், இவ்வுலகின் மக்கள் நம்மைத் துன்புறுத்த திட்டம் தீட்டலாம். ஆனால், பகைவர்களின் கையிலிருந்து நம்மை விடுவித்து காக்க கடவுள் வல்லவர் என்பதை புரிந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் துணையை நம்பி, நீதிமான்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, ஞானம் காட்டும் வழியில் தூய்மையாக வாழுமாறு அழைப்பு விடுக்கிறார். சிற்றின்ப நாட்டங்களில் ஆர்வம் கொள் வதையும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறார். அமைதியை நாடும் ஞானத்தால் இரக்கமுள்ள நற்செயல்களைச் செய்து நீதியின் கனியை விளைவிக்குமாறு அறிவுறுத்துகிறார். தூய உள்ளத்தோடு, நீதியை நிலைநாட்டுபவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா, 
   எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உகந்த பணியாளர்களாக திருச்சபையின் மக்களை வழிநடத்த தேவையான ஞானத்தை வழங் கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஞானத்தை தருபவராம் இறைவா,
  உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உம்மைப் பற்றிய ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும்,
வன்முறைகளில் இருந்து மக்களை விலக்கி காத்து, அமைதியை நிலைநாட் டவும் தேவையான உறுதியை அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் நாயகராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும், நீதியின் வழியில் அமைதியை விரும்புபவர்களாக வாழவும், சண்டை சச்சரவுகளுக்கு இடம் கொடுக்காமல் மனித நேயத்தோடு செயல்பட வும் தேவையான தூய உள்ளத்தை தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. துன்பங்களை நீக்குபவராம் இறைவா,
   உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மைகளின் பிறப்பிடமாம் இறைவா,
   உம் திருவுளத்தை உணர்ந்தவர்களாய், நீதியின் வழியில் நன்மை செய்பவர்களாக வாழத் தேவையான அருள் வரங்களை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக் கள் அனைவர் மீதும் பொழிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, September 14, 2012

செப்டம்பர் 16, 2012

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 50:5-9 
   ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழ வில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங் குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ் வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண் டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 2:14-18
   என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதை செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள் என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்ற தாயிருக்கும். ஆனால், ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல் கள் இருக்கின்றன என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 8:27-35
   அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப் பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கி றார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். 'மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்' என்று இயேசு அவர்களுக்குக் கற் பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார். பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவை யைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, September 12, 2012

செப்டம்பர் 16, 2012

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மீட்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நமது சிலுவையை சுமந்து கொண்டு ஆண்டவரைப் பின்பற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவ வாழ்வென் பது ஒரு சீடருக்குரிய வாழ்வு. அற்புதங்களையும், அதிசயங்களையும் எதிர்பார்க்காமல், இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பயணத்தைப் பின்தொடர நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அரச அதிகாரத்தோடு கூடிய மெசியாவை அல்ல, சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை நாம் பின்பற்ற வேண்டும் என்பதே கடவுளின் திருவுளம் என்பதை நினை வில் கொண்டு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இறையாட்சியின் இலட்சியங்களுக்காக நம்மை முழுவதும் இழந்து கடவுளின் அரசை இவ்வுலகில் நிலைநாட்டும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
மீட்புக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஆண்டவருக்காக துன்புறு வதைப் பற்றி எடுத்துரைக்கிறார். நாம் குற்றமற்றவர்கள் என்று கடவுள் தீர்ப்பு வழங்கும் வகையில் வாழ்ந்தால், இவ்வுலகின் துன்புறுத்தல்களுக்கு பயப்படத் தேவையில்லை என்ற செய்தியை அவர் வழங்குகிறார். அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங் குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ் வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற வார்த்தைகள் இயேசுவின் திருப்பாடு களை நமக்கு நினைவூட்டுகின்றன. கடவுளின் துணையை முழுமையாக நம்பி வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மீட்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, கிறிஸ்தவ நம்பிக்கையை செயலில் காட்டுமாறு அழைப்பு விடுக்கிறார். தேவையில் இருப்பவருக்கு தேவையான வற்றைக் கொடுக்காமல், "நலமே சென்று வாருங்கள், குளிர் காய்ந்து கொள்ளுங்கள், பசியாற்றிக் கொள்ளுங்கள்" என்று கூறுவதால் எந்த பயனும் விளையப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் அனைவரும், நமது நம்பிக்கையை செயலில் வெளிப்படுத்தி மீட்படையும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மீட்பு அளிப்பவராம் இறைவா, 
   உம் திருமகனின் சிலுவைப்பாதையைப் பின்பற்றி உலகில் நீதியையும், அமைதியை யும் நிலைநாட்டுபவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் அளித்து, உமது திருச்சபையை மீட்பின் பாதையில் வழி நடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கை தருபவராம் இறைவா,
  உலக மக்கள் அனைவரும் உம் திருமகனின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவத்தை உணரவும், அவரது சிலுவையின் வழியாக நீர் செயல்படுத்திய மீட்புத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவும் தேவையான மனதை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நன்மை செய்பவராம் இறைவா,
  எங்கள் நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரும், கிறிஸ்துவைப் பின்பற்றி தன்னலமற்ற சேவை செய்பவர்களாக திகழவும், மக்களின் நலனுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்பவர்களாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வை வழங்குபவராம் இறைவா,
   உமது மக்களாகவும், உம் திருமகனின் சீடர்களாகவும் வாழ அழைக்கப்பட்டுள்ள கிறிஸ் தவர்கள் அனைவரும், பசி, நோய், துன்பம் போன்றவற்றால் வேனையுறும் மக்களுக்கு பணியாற்றி, புதுவாழ்வு அளிக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. துன்புற அழைப்பவராம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பயணத்தைப் பின்பற்றி, இறையாட்சியின் இலட்சியங்களுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் நல்ல உள்ளத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, September 7, 2012

செப்டம்பர் 9, 2012

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 35:4-7 
   உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.'' அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளா தோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 2:1-5
   என் சகோதர சகோதரிகளே,  மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, "தயவுசெய்து இங்கே அமருங்கள்'' என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, "அங்கே போய் நில்'' என்றோ அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார்'' என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல் லவா? என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாக வும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

நற்செய்தி வாசகம்: மாற்கு 7:31-37
   அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவ ருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக் குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண் டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!'' என்று பேசிக் கொண் டார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, September 5, 2012

செப்டம்பர் 9, 2012

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவில் செயல்பட்ட கடவுளின் வல்லமையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர்கள் முன்னறிவித்த இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறியதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. அற்புதங்கள் செய்கின்றவராகிய நம் ஆண்டவரை நம்பிக்கையோடு தேடிச் சென்று நன்மைகளைப் பெற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகி றோம். நமது உடல், உள்ளக் குறைகளை நீக்க அவரால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டுமே கடவுள் எதிர்பார்க்கிறார். நம் ஆண்டவரைப் போன்று பிறருக்கு நன்மை செய்ப வர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுள் இந்த உலகிற்கு வரு வார் என்ற நம்பிக்கையின் செய்தியை வழங்குகிறார். கடவுள் அநீதிக்கு பழிவாங்குபவ ராக வந்து மக்களை விடுவிப்பார் என்ற இனிமையான செய்தி தரப்படுகிறது. பார்வை யற்றோர் பார்ப்பர், காது கேளாதோர் கேட்பர், கால் ஊனமுற்றோர் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என்ற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கடவுளில் முழுமை யாக நம்பிக்கை வைத்து, அவரது நலந்தரும் வாக்குறுதிகளுக்கு தகுதியுள்ளவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, அனைவரையும் சமமாக கருதும் மனநிலையோடு செயல்படுமாறு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட நம் ஒவ் வொருவருக்கும் அழைப்பு விடுக்கிறார். வேறுபாடின்றி அனைவருக்கும் கடவுள் நன்மை களைப் பொழிவது போன்று, நாமும் வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் நல்லவற்றை செய்ய அழைக்கப்படுகின்றோம். கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்தவர்களாய், ஏற்றத்தாழ்வு பார்க்காமல் வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நன்மைகளின் ஊற்றாம் இறைவா, 
   உம் திருமகனின் வழியில் அனைவருக்கும் நன்மை செய்பவர்களாகவும், நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் வாழும் வரத்தை, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார் அனைவருக்கும் அளித்து, உமது திருச்சபையை புனிதத்தில் வழிநடத்த வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,
  உலகெங்கும் நீர் செய்து வரும் அற்புதங்களின் மேன்மையால் மக்கள் உமது வல்ல மையை உணரவும், நீர் உண்மை கடவுள் என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள் ளவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் ஊற்றாம் இறைவா,
 
எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் தன்னலத்தினைக் களைந்து, சமூக நலத்திலும், எளியவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து, இறையாட் சிக்குரிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நலந்தரும் ஊற்றாம் இறைவா,
   உம்மை நம்பிக்கையோடு தேடி வரும் மக்களின் உடல் நோய்களையும், மன நோய்க ளையும் முழுமையாக குணப்படுத்தி, மற்றவர்களின் முன்னிலையில் உமது மாட்சிமிகு செயல்களின் சாட்சிகளாக
அவர்களை மாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அருளின் ஊற்றாம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரி கள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, September 1, 2012

செப்டம்பர் 2, 2012

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

முதல் வாசகம்: இணைச்சட்டம் 4:1-2,6-8 
   இஸ்ரயேலரே! கேளுங்கள்: "நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமை களின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளை களை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவற் றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மை யில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?"
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 1:17-18,21-22,27
   சகோதர சகோதரிகளே,  நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வ கையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்பு களுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன் றெடுக்க அவர் விரும்பினார். உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணி வோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்க ளையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 7:1-8,14-15,21-23
   ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந் தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந் துவதேன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். "இம்மக்கள் உதட்டினால் என் னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக் கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கை விட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார். இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல் வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயி ருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத் திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காம வெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3