Saturday, June 8, 2013

ஜூன் 9, 2013

பொதுக்காலம் 10-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 அரசர்கள் 17:17-24
   ஒருநாள் எலியா தங்கியிருந்த வீட்டுத் தலைவியின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது. அவர் எலியாவிடம், "கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?" என்றார். எலியா அவரிடம், "உன் மகனை என்னிடம் கொடு" என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடி யறைக்குத் தூக்கிச் சென்று தம் படுக்கையில் கிடத்தினார். அவர் ஆண்டவரை நோக்கி, "என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனை சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா?" என்று கதறினார். அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப் படுத்து ஆண்டவரை நோக்கி, "என் கடவுளாகிய ஆண்டவரே, இந் தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்" என்று மன்றாடினார். ஆண்டவரும் எலியா வின் குரலுக்குச் செவிகொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான். எலியா சிறுவனைத் தூக்கிக்கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, "இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்" என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். அந்தப் பெண் எலியாவிடம், "நீர் கடவுளின் அடி யவர் என்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானது என்றும் தெரிந்து கொண்டேன்" என்றார்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 1:11-19
   சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்க ளுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்க வில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண் டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்க வனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூத நெறியில் சிறந்து விளங்கி னேன். ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண் டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்கு போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்கு போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக் கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.

நற்செய்தி வாசகம்: லூக்கா 7:11-17
  அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந் திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம் பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, "அழாதீர்" என்றார். அருகில் சென்று பாடை யைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், "இளை ஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்ச முற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3