Thursday, May 29, 2014

ஜூன் 1, 2014

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
"இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்."
விண்ணகத்துக்குரியவர்களே,
   ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரை யும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெ ழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைகிறார். இந்த உலகை விட்டு செல்லும் முன், எந்நாளும் நம் மோடு இருப்பதாக அவர் வாக்களித்திருக்கிறார். தந்தையாம் இறைவனின் மாட்சிக்காக, தூய ஆவியாரின் துணையோடு கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகி றோம். முதல் கிறிஸ்தவர்களைப் போன்று, ஆண்டவரின் மாட்சியை உலகெங்கும் பறை சாற்ற நினைவூட்டப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் அனைவரையும் அவரது சீடர்களாக்கும் ஆர்வத்துடன் பணியாற்ற, இத்திருப்பலியில் நாம் வரம் வேண்டுவோம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
     திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து வாசிக்கப்படும் இன்றைய முதல் வாசகம், இயேசு வின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. இயேசு விண்ணேற்றம் அடையும் முன், இறைத்தந்தையின் வாக்குறுதியாகிய தூய ஆவியாரின் வருகைக்காக காத்திருக்குமாறு சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். உலகின் கடையெல்லை வரைக்கும் இயேசுவுக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு உலகின் முடிவில் மீண்டும் வருவார் என்ற முன் னறிவிப்பு வானதூதர்கள் வழியாக வழங்கப்படுகிறது. கிறிஸ்துவின் வல்லமையாகிய தூய ஆவியாரின் வருகைக்கு நம்மைத் தயார் செய்யும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
  புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இடம்பெறும் இன்றைய இரண்டாம் வாசகம், நம்மில் செயலாற்றும் இறை வல்லமையின் மேன்மையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்த இயேசு, அனைத்துக்கும் மேலான மாட்சியைப் பெற்றிருப்பதை புனித பவுல் எடுத்துரைக்கிறார். தலையாகிய கிறிஸ்துவுக்கு பணிந்து அவரது உடலாக வாழ திருச் சபையின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வழியாக கடவுள் அளிக்கும் உரிமைப்பேற்றை நிறைவாகப் பெற வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எல்லாம் வல்லவரே இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமது திருமகனின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றின் நற்செய்தியை உலக மக்கள் அனைவருக்கும் வழங்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணில் வாழ்பவரே இறைவா,
   மண்ணக இன்பங்களுக்கு அடிமையாகி, விண்ணக வாழ்வைப் பற்றிய சிந்தனையின்றி வாழ்கின்ற மக்கள் அனைவரும், உமது திருமகனின் உயிர்ப்பிலும் விண்ணேற்றத்திலும் உம்மைக் கண்டுணர உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
3. தலைசிறந்த அரசரே இறைவா,
   எம் நாட்டு மக்களும், தலைவர்களும் உம் திருமகன் இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ளவும், அவர் அறிவித்த விண்ணரசில் பங்கேற்க ஆர்வம் காட்டவும், தேவை யான மனமாற்றத்தை தந்து உதவுமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுமைகளின் நாயகரே இறைவா,
   எங்கள் ஆண்டவர் இயேசு
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் கொண்டிருக்கும் அதிகா ரத்தால், உலக மக்களின் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணமாக்கும் பணியை திருச் சபை ஆர்வமாக செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் தலைவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வை உரித்தாக்கும் மனநிலையுடன் கிறிஸ்துக்கு சான்று பகரும் நற்செய்திப் பணியாளர்களாக வாழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, May 24, 2014

மே 25, 2014

உயிர்ப்பு காலம் 6-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 8:5-8,14-17
   அந்நாள்களில் பிலிப்பு, சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப் பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்; ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவ ராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே, அவர்கள் தூய ஆவி யைப் பெற்றார்கள்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 66:1-3.4-5.6-7.16,20
பல்லவி: அனைத்துலகோரே, கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
   அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, "உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை" என்று சொல்லுங்கள். (பல்லவி)
   "அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்" என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. (பல்லவி)
   கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள் கிறார்! (பல்லவி)
   கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என் னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:15-18
    அன்பிற்குரியவர்களே, உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்ற தாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல். கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடு இருந்த அவர் இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

வாழ்த்தொலி: யோவான் 14:23
   அல்லேலூயா, அல்லேலூயா! "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 14:15-21
  அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண் டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கி யிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விட மாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள் வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.''

Thursday, May 22, 2014

மே 25, 2014

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
"என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார்."
ஆண்டவருக்குரியவர்களே,
   இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இயேசுவுக்குள்ளும் அவர் நமக்குள்ளும் இருக்கின்ற உண்மையை உணர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்மோடு என்றும் இருக்கும்படியாக தூய ஆவியார் என்ற துணை யாளரை இயேசு நமக்கு அளித்துள்ளார். தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவர் களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழைப்புக்கு ஏற்ப இயேசுவின் கட்டளைகளை கடைப்பிடித்து, கடவுளை அன்பு செய்கிற வர்களாக வாழ வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், யூதர்களால் வெறுக்கப்பட்ட சமாரிய மக்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்ட நிகழ்வை எடுத்துரைக்கிறது. திருத்தொண்டர்களுள் ஒருவரான பிலிப்பு சமா ரியா நகரில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து, அரும் அடையாளங்களையும் செய் தார். இதனால் அந்நகர மக்கள் மனந்திரும்பி இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டனர். திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் அவர்கள்மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக்கொள்வதைக் காண்கிறோம். ஆயர்களின் அதிகாரம் திருத்தூதர்களி டம் இருந்தே வருகிறது என்பதை உணர வரம் வேண்டி, இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, துன்பங்கள் நேரிட்டாலும் இயேசு வின் பெயரால் நன்மை செய்ய அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து இயேசுவே நம் ஆண்டவர் என்பதை நம் உள்ளத்தில் இருத்தி, அவரைப் போற்றுமாறு அறிவுறுத்துகிறார். பிறரிடம் மரியாதையோடும் பணிவோடும் நடந்துகொள்ளவும், குற்றமற்ற மனச்சான்று உடையவர் களாய் திகழவும் வலியுறுத்துகிறார். நீதியற்றவர்களுக்காக இறந்த நம் ஆண்டவர் இயேசு வைப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு ஏற்ப
ஆவிக் குரிய இயல்பு உடையவர்களாய் வாழ வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவி யேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அன்பின் ஊற்றே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரின் வழியாக உமது அன் பின் நற்செய்தி விரைந்து பரவவும், மக்கள் அனைவர் மீதும் தூய ஆவியார் பொழியப்பட வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசே இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் போர், வன்முறை ஆகியவற்றின் வழி களைக் கைவிட்டு, மக்களை அன்பிலும் அமைதியிலும் வழிநடத்த உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
3. அன்பின் நிறைவே இறைவா, 
   எம் நாட்டில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசின் பிரதமரையும் அமைச்சர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, மக்களை உண்மையின் பாதையில் வழிநடத்தும் விவேகத்தை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பு பொழிபவரே இறைவா,
   உலகில் பசி,
நோய், வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் துயருறும் மக்கள் அனை வரும், உமது அன்பின் அரவணைப்பில் புதிய விடியலைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பு தந்தையே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியாரின் துணையுடன் உமது கட்டளைகளைக் கடைபிடித்து, உண்மையின் சாட்சிகளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, May 17, 2014

மே 18, 2014

உயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 6:1-7
   அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப் படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தை யைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங் கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்'' என்று கூறினர். திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். கடவுளது வார்த்தை மேன் மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 33:1-2.4-5.18-19
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
   நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்த மானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவ ரைப் புகழ்ந்து பாடுங்கள். (பல்லவி)
   ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவு லகு நிறைந்துள்ளது. (பல்லவி)
   தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத் திலும் வாழ்விக்கின்றார். (பல் லவி)

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 2:4-9
    அன்பிற்குரியவர்களே, உயிருள்ள கல்லாகிய ஆண்டவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப் படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிக ளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! ஏனெனில், "இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையு யர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்'' என்று மறைநூலில் காணக்கிடக்கிறது. நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர் மதிப்புள்ளதாக விளங்கும். நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், "கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன் மையான மூலைக்கல்லாயிற்று." மற்றும் அது, "இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய் யும் கற்பாறையாகவும்" இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகி றார்கள்; இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக் கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.

வாழ்த்தொலி: யோவான் 14:6
   அல்லேலூயா, அல்லேலூயா! "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 14:1-12
  அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் உள்ளம் கலங்க வேண் டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், 'உங்க ளுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்றார். தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக் கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?" என்றார். இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார். இயேசு அவரிடம் கூறியது: "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, 'தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவ தில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்து கொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, May 15, 2014

மே 18, 2014

உயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே!"
உண்மைக்குரியவர்களே,
   ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இயேசுவே நம் வழியும் உண்மையும் வாழ்வு மாக இருக்கிறார் என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு தந்தையினுள்ளும் தந்தை இயேசுவினுள்ளும் ஒன்றித்திருப்பதை நம்புமாறு நாம் அழைக்கப்படுகிறோம். மனிதராய் வந்த இறைமகனில் செயல்பட்ட இறைத்தந்தையைக் கண்டுகொள்ள இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். மனிதராய் பிறந்து நம்மிடையே வாழ்ந்த இயேசுவில் வெளிப்பட்ட கடவுளின் அன்புக்கு நம்மை முழுவதும் அர்ப்பணிப் போம். கிறிஸ்து இயேசுவின் வழியாய் உண்மை கடவுளைக் கண்டு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவனின் திட்டத்துக்கு எதிரானவற்றை நாம் செய்யக் கூடாது என்ற பாடத்தை நமக்கு கற்பிக்
கிறது. தொடக்கத் திருச்சபையில் கிரேக்க மொழி பேசுவோருக்கும், எபிரேய மொழி பேசுவோருக்கும் இடையே உணவு பகிர்தலில் ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றி இங்கு வாசிக்கிறோம். இதைத் தீர்ப்பதற்காக திருத்தொண்டர்கள் ஏழு பேரை திருத்தூதர்கள் நியமிப்பதைக் காண்கிறோம். திருத்தூதர்களின் போதனையால் திருச்சபை விரைந்து வளர்ந்தது. நாமும் கடவுளின் திட்டத்தை நம்மில் நிறைவேற்றி இயேசுவுக்கு சாட்சிகளாய் திகழ வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, கிறிஸ்து இயேசுவே திருச்சபை யின் உயிருள்ள மூலைக்கல்லாய் இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கிறார். நாம் தூய ஆவியின் ஆலயங்களாக கட்டி எழுப்பபட வேண்டுமென திருத்தூதர் நமக்கு அறிவுறுத்து கிறார்.
நமக்காக உதறித் தள்ளப்பட்ட இயேசுவுக்காக நம்மையே பலியாக ஒப்படைத்து, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ள ஆண்டவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பவர்களாக வாழ வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உண்மை வழியே இறைவா,
   திருச்சபையின் மக்களை உமது வழியில் நடத்தி, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மை ஒளியே இறைவா,
   இந்த உலகில் உம்மைப் பற்றிய உண்மையை ஏற்காமலும், புரிந்து கொள்ளாமலும் வாழும் அனைவரின் உள்ளங்களிலும் உமது ஒளியை வீசி,
அவர்களுக்கு விசுவாசத்தை ஊட்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மை வாழ்வே இறைவா,
  எம் நாட்டு மக்களுக்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவை உறுப்பினர் கள் அனைவரையும் உமது வழியிலும் உண்மையிலும் வழிநடத்தி, எங்கள் வாழ்வை வள மாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. உண்மை உயிரே இறைவா,
   உலகெங்கும் பரவி வரும் பயங்கரவாதம், மதவாதம், இனவாதம் போன்ற தீமைகள் நீங்குமாறு, மக்களின் உள்ளங்களில் அமைதியையும் அன்பையும் விதைத்து உயிரூட்டு மாறு
உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மை நிறைவே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் உண்மை வழியில் நடந்து, நீர் அளிக்கும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, May 10, 2014

மே 11, 2014

உயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:14,36-41
   பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ர யேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்." அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங் கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்கு றுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது" என்றார். மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, "நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தை களை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயி ரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 23:1-3.3-4.5.6
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
   ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். (பல்லவி)
   தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக் கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். (பல்லவி)
   என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. (பல் லவி)
   உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். (பல் லவி)

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 2:20-25
    அன்பிற்குரியவர்களே, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதி ரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற் றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். 'வன்செயல் எதுவும் அவர் செய்த தில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை.' பழிக்கப்பட்டபோது பதிலுக்கு பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்கு வோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர் தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். நீங்கள் வழி தவறி அலையும் ஆடுக ளைப் போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண் காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

வாழ்த்தொலி: யோவான் 10:14,15
   அல்லேலூயா, அல்லேலூயா! "நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்தி ருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன," என்கிறார் ஆண்டவர். அல்லே லூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 10:1-10
  அக்காலத்தில் இயேசு கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட் டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்குமுன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது." இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை. மீண்டும் இயேசு கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர் களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற் கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறை வாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, May 8, 2014

மே 11, 2014

உயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
"ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டே நான் வந்துள்ளேன்."
இயேசுவுக்குரியவர்களே,
   உயிர்ப்பு காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். நம் ஒவ்வொருவரையும் அறிந்து வைத்திருக்கும் நல்ல ஆயரான இயேசுவின் குரலுக்கு செவிகொடுத்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. வாயில் வழியாக நுழையாமல், வேறு வழியாக ஏறிக் குதிக்கும் திருட ரிடமும் கொள்ளையரிடமும் சிக்கிக் கொள்ளாமல், நல்ல ஆயரான இயேசுவின் பாது காப்பில் வாழ அழைக்கப்படுகிறோம். ஆட்டுக் கொட்டிலின் வாயிலாக விளங்கும் நம் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கும்போது, நாம் வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும். நல்ல ஆயரான இயேசுவைப் பின்தொடர்ந்து, நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஆடு களாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், திருத்தூதர்கள் பேதுருவின் மறையுரையால் மூவாயிரம் பேர் மனந்திரும்பி திருமுழுக்கு பெற்ற நிகழ்வை எடுத்துரைக்
கிறது. சிலுவையில் அறையப் பட்ட இயேசுவே மெசியா என்பதை எருசலேமில் இருந்த இஸ்ரயேல் மக்களிடையே பேதுரு பறைசாற்றுகிறார். அவரது போதனை மக்களின் உள்ளத்தை ஊடுருவி, அவர்களை இயேசுவின் மந்தையில் இணைத்ததைக் காண்கிறோம். திருத்தூதரின் வார்த்தையை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெற் றார்கள் என அறிகிறோம். நாமும் மற்றவர்கள் முன்னிலையில் இயேசுவுக்கு வல்லமை யுடன் சான்று பகர வரம் வேண்டி இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இயேசுவுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, கிறிஸ்து இயேசுவின் அடிச் சுவடுகளைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறார். நமக்காக
துன்புற்ற ஆண்டவரின் முன் மாதிரியைக் கண்முன் கொண்டு, துன்புறுத்தல்களின் நடுவிலும் பொறுமையுடன் நடந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். சிலுவையில் நமது பாவங்களை சுமந்து தீர்த்த இயேசுவின் காயங்களால் நாம் குணமடைந்துள்ளோம் என திருத்தூதர் எடுத்துரைக்கிறார். நம் ஆயரும் கண்காணிப்பாளருமான இயேசுவின் அரவணைப்பில் வாழுமாறு பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார். கிறிஸ்துவின் மந்தையில் தூய்மை நிறைந்த ஆடுகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நல்ல ஆயரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், பல்வேறு சபைகளாக பிரிந்து வாழும் கிறிஸ்தவர்களை உமக்கு உகந்த ஒரே மந்தையாக ஒருங்கிணைக்க உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மை ஆயரே இறைவா,
   தவறானவற்றை தெய்வங்களாக கருதி வழிபடும் மக்கள் அனைவரும், நீர் ஒருவரே கடவுள் என்பதை அறிந்து மனம் திரும்பவும் உமது மந்தையில் ஒன்றிணையவும்
உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் ஆயரே இறைவா,
   எம் நாட்டை வழிநடத்த இருக்கும் புதிய அரசின் தலைவர்
கள், நீதியோடும் நேர்மை யோடும் மக்களை ஆட்சி செய்யவும், உமது திருச்சபை வளர துணை நிற்கவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நேரிய ஆயரே இறைவா,
   பணம், பதவி, போதை, வன்முறை ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், பிறருடைய நிம்மதியை கெடுப்பவர்கள் அனைவரும், நல்லவர்களாக மனம் மாற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. கனிவின் ஆயரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மைப் பின்தொட ரும் நல்ல ஆடுகளாகவும்,
உமது உயிர்ப்பின் சாட்சிகளாகவும் வாழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, May 3, 2014

மே 4, 2014

உயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:14,22-33
   பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "யூத மக்களே, எருசலே மில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாச ரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களை யும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறி வின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறி யாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக்குறித்துக் கூறியது: 'நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழி யைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர்; உமது முன்னிலை யில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.' சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வ ராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறை வாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன் னறிந்து, 'அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காண விடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலதுப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிட மிருந்து பெற்றுப் பொழிந்தருளி னார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 16:1-2,5.7-8.9-10.11
பல்லவி: ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்!
   இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. (பல்லவி) 
   எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச் சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். (பல்லவி)
   என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாது காப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். (பல்லவி)
   வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 1:17-21
    நீங்கள் "தந்தையே" என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள் உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழி வுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும் உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.

வாழ்த்தொலி: திருப்பாடல் 118:24
   அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: லூக்கா 24:13-35
  வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, "வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டி ருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, "எருசலேமில் தங் கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!" என் றார். அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல் லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்து சிலுவை யில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப் புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்கு சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர் கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே! இறைவாக்கினர் கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி யடைவதற்கு முன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!" என்றார். மேலும் மோசே முதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொரு வர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எரு சலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர் களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவே உயி ருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்'' என்று சொன்னார் கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, May 1, 2014

மே 4, 2014

உயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
எங்களோடு தங்கும் ஆண்டவரே!
வழிப்போக்கர்களே,
   உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இருள் சூழும் நேரத்தில் நாம் நடந்து செல்லும்போது, இயேசு நமக்கு வழித்துணையாக வருகிறார் என் பதை உணர்ந்துகொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு வின் இறப்பால் மனம் உடைந்து போயிருந்த சீடர்கள் இருவர் எம்மாவு செல்லும் வழியில், ஆண்டவர் உடன் நடப்பதைக் காண்கிறோம். அவர்களின் அவநம்பிக்கையைப் போக்கும் விதமாக மறைநூலின் இறைவாக்குகள் மூலம் தமது உயிர்ப்பை விளக்கி கூறுகிறார். இயேசு அப்பத்தைப் பிட்டபோது, சீடர்கள் அவரைக் கண்டு கொண்டார்கள். நற்கருணை யில் நம்மோடு உடனிருக்கும் ஆண்டவர் இயேசுவை, நமது விசுவாசப் பயணத்தில் வழித் துணையாக கொண்டு வாழும் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
வழிப்போக்கர்களே,
   இன்றைய முதல் வாசகம், பெந்தகோஸ்து நாளில் எருசலேம் நகரில் பேதுரு ஆற்றிய மறையுரையை எடுத்துரைக்கிறது.
அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்த இயேசு, கடவுளது திட்டத்தின்படியே யூதர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டார் என்று பேதுரு கூறுகிறார். யூதர்கள் அவரை உரோமையர்கள் மூலம் சிலுவையில் அறைந்துக் கொன்றாலும், தந்தையாம் கடவுள் உயிர்த்தெழச் செய்ததை விளக்குகிறார். இறைத்தந் தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் இயேசுவின் உயிர்ப்புக்கு திருத்தூதர்களே சாட்சிகள் என்றும் எடுத்துரைக்கிறார். இயேசுவை நமது வழித்துணையாக ஏற்றுக்கொண்டுள்ள நாம், அவருக்கு சான்று பகர்ந்து வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
வழிப்போக்கர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, இயேசுவின் வழியாக கடவுளிடம் நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவே என்பதை உணர நாம் அழைக்கப்படுகி றோம். கிறிஸ்துவின்
உயர்மதிப்புள்ள இரத்தத்தால் மீட்கப்பட்ட அனைவரும் நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்குமாறு திருத்தூதர் வலியுறுத்துகிறார். உயிர்த்தெழுந்து விண்ண கத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்துவின் வருகைக்காக நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க நினைவூட்டப்படுகிறோம். விசுவாசத்தில் தளராமல் கிறிஸ்துவை எதிர்நோக்கிய வர்களாய் பயணத்தை தொடர வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாழ்வின் வழித்துணையே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மையே வழித் துணையாக கொண்டு விசுவாச வாழ்வில் நடை பயிலவும், உம் மக்களை வழிநடத்தவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. மூவுலக அரசரே இறைவா,
   உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்கருணையில் உம் திருமகனின் உடனிருப்பை உணரவும்,
பிற சமயத்தினர் முன்னிலையில் உமக்கு சான்று பகரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் உருவே இறைவா,
   எங்கள் நாட்டில் உருவெடுத்து வரும் மத பயங்கரவாதம், இன, மொழி தீவிரவாதம் ஆகியவை மறைந்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு அமைதியில் வாழ உதவு மாறு  உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் ஊற்றே இறைவா,
   உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனை வரும், உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. உண்மையின் நிறைவே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனின் உடலால் ஊட்டம் பெற்று வழிநடக்கவும், அவரது உயிர்ப்புக்கு சாட்சிகளாய் திகழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.