Thursday, July 24, 2014

ஜூலை 27, 2014

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
விண்ணரசுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவனின் அரசில் ஒன்றிணைய அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. விண்ணரசு ஒரு புதையலுக்கும், விலைமதிப்பற்ற ஒரு முத்துக்கும் ஒப்பானது என இயேசு குறிப்பிடுகிறார். தம் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, புதையல் உள்ள நிலத்தையும், ஒப்பற்ற முத்தை யும் அடைய முயற்சிப்பது போன்று, விண்ணரசை அடைய இவ்வுலகின் நாட்டங்களை கைவிட நாம் அழைக்கப்படுகிறோம். விண்ணரசு என்ற வலையில் சிக்கும் நல்ல மீன்க ளாக வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணரசுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், சாலமோன் ஆண்டவரிடம் ஞானத்தை வரமாக கேட்டுப் பெற்ற நிகழ்வை விவரிக்கிறது. இஸ்ரயேல் பேரரசின் அரசராக பொறுப்பேற்ற சாலமோ னின் கனவில் ஆண்டவர் தோன்றி, என்ன வரம் வேண்டுமெனக் கேட்கிறார். அரசர் என்ற முறையில் மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான சாலமோன் வேண்டுவதைக் காண்கி றோம். அவரது மேலான எண்ணத்தை பாராட்டும் ஆண்டவர், சாலமோனுக்கு ஞானத்தை வழங்குகிறார். ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஞானம் வேண்டி, இவ் வாசகத்தை உளமேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணரசுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுளின் திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டோர் தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை நினைவூட்டுகி றார். இறைமக்கள் அனைவரும், இயேசுவின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறார். கடவுளின் மக்களாகுமாறு அழைப்பு பெற்றுள்ள நாம் அனைவரும், கடவுளுக்கு ஏற்புடையோராக வாழ அழைக்கப் படுகிறோம். விண்ணரசுக்கு உரியவர்களாய் கடவுளின் மாட்சியில் பங்கு பெற வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் ஊற்றே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் உமது ஞானத்தை அளித்து, உலக மக்கள் அனைவரையும் விண்ணரசின் உறுப்பினர்களாக மாற்ற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணக அரசரே இறைவா,
  
உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாய் செயல்படவும், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஞானத்துடன் முடிவெடுக்கவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒப்பற்ற புதையலே இறைவா,
   ஆன்மீக இருளில் சிக்கியிருக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உமது உண்மையின் அரசில் ஒன்றிணைவதற்காக, பொய்மை நெறிகள் அனைத்தையும் கைவிட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. தேர்வு செய்பவரே இறைவா,
   பிறவிப் பெருங்கடலில் நீந்தும்
மீன்களான கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், தீயவை அனைத்திலிருந்தும் விலகி, நன்மைத்தனத்தால் விண்ணரசுக்கு தகுதிபெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. இணையில்லா முத்தே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மை அடைவதற் காக இவ்வுலக
த் தீய நாட்டங்களைத் துறக்கும் துணிவைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.