Wednesday, July 18, 2012

ஜூலை 22, 2012

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் மந்தையாகிய மக்கள் முறையான வழிநடத்துதல் இன்றி சிதறிப்போகும்போது, ஆண்டவர் நமக்காக புதிய ஆயர்களை வழிகாட்டிகளாக அனுப்பு கிறார் என்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இறைவனின் பராம ரிப்பை வழங்கும் திருச்சபையின் திருப்பணியாளர்களைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப் படுகிறோம். இறைவனால் நம்மிடம் அனுப்பப்பட்ட மேய்ப்பர்களாகிய அவர்களை ஏற்று வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் ஆடுகளை சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு எதிரான வார்த்தைகள் இறைவாக்கினர் எரேமியா வழியாக உரைக்கப்படுகின்றன. ஆண்ட வர் தனது மந்தையாகிய இறைமக்கள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை நாம் இங்கு காண்கிறோம். தாவீதின் வழிமரபில் தோன்றும் கிறிஸ்து வழியாக, புதிய ஆயர் களை உருவாக்கும் கடவுளின் திட்டம் முன்னறிவிக்கப்படுகிறது. இறைத்திட்டத்துக்கு உகந்த ஆயர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கீழ்ப்படியும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், யூதர்கள், பிறஇனத்தார் என்று பிரிந்திருந்த உலக மக்களை கிறிஸ்துவே ஒன்றிணைத்தார் என்று எடுத்துரைக்கிறார். அன்பின் வெளிப்பாடாக இயேசு நமக்காக ஏற்றுக்கொண்ட துன்பங்கள் வழியாக, நமது பகைமைச்சுவர் தகர்க்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்து அறிவித்த அமைதியின் நற்செய்தி நம்மை தந்தையாம் கடவுளிடம் கொண்டு சேர்க்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நல்லாயராம் இறைவா,
  
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமக்கு ஏற்ற நல் மேய்ப்பர்களாக பணியாற்றவும், இறைமக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, உமது அரவணைப்பின் கீழ் கொண்டு வரவும் துணைசெய்ய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் தலைவராம் இறைவா,
   உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் உமக்கு உகந்த தலைவர்களால் வழிநடத்தப் படவும், அன்பு, அமைதி, ஒற்றுமை போன்ற இறையரசின் மதிப்பீடுகளை இம்மண்ணில் நிலைநாட்டவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆயர்களை அனுப்புபவராம் இறைவா,
  
உண்மையின் வழியில் மக்களை வழிநடத்தும் நல்ல ஆயர்களை எங்கள் நாட்டுக்கு அனுப்பி, வாழும் உண்மை கடவுளாகிய உம்மை அறிந்துகொள்ள மக்களுக்கு உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒன்றிணைப்பவராம் இறைவா,
   பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள், நாடுகள் மற்றும் இனங்களின் மக்கள் அனைவரும், ஏற்றுக்கொள்தல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்தவர்களாய், பகைமையை வி
டுத்து ஒன்றிப்பில் புது வாழ்வு காண அகத்தூண்டுதல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வு தருபவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், கிறிஸ்துவின் நற்செய்தி ஒளியில் வாழவும், உமக்கு சான்று பகரும் மந்தையாய் ஒன்றிணைந்து செயல் படவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.