Wednesday, August 15, 2012

ஆகஸ்ட் 19, 2012

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஞானத்துக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவின் திருவுடலையும், திரு இரத்தத்தையும் உண்டு நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக் கிறது. உலக பொருட்களில் பற்றுள்ளவர்களாய் வாழாமல், கடவுள் தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஞானமுடையவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவு ளுக்கு உண்மை உள்ளவர்களாய் திகழ்ந்து, கடவுள் தருபவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ இயேசு நம்மை அழைக்கிறார். நாம் வாழ்வு பெறுவதற்காக, அவர் தன்னையே நமக்கு உணவாக தருகிறார். விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உண வாகிய இயேசுவின் சதையாலும், இரத்தத்தாலும் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரி மையாக்கிக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஞானத்துக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், கடவுள் தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளத் தேவையான ஞானத்தைப் பற்றி பேசுகிறது. ஞானம் தயார் செய்து அளிக்கும் இன்சுவை விருந்தில் பங்கேற்க அறியாப்பிள்ளைகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. ஞானம் தரும் விருந்தில் கலந்துகொண்டு கடவுளுக்கு உரியவர்களாய் வாழ நாம் அழைக்கப்படு கிறோம். ஞானத்தின் வழியாக நேரிய வழியில் பயணித்து வாழ்வைக் கண்டடையும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஞானத்துக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமது நடத்தையைப் பற்றி கருத் தாய் இருக்குமாறு அழைப்பு விடுக்கிறார். இவ்வுலகின் தீயப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாதவாறு, ஞானத்தோடு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். நமது சொல்லும், செயலும் ஆண்டவரின் மாட்சியை பறைசாற்றும் வகையில் அமைய வேண்டுமென்று பவுல் எடுத்துரைக்கிறார். இயேசு கிறிஸ்துவின் பெயரால் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் ஊற்றே இறைவா, 
   உமது திருமகனின் சதையாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெறும் திருச்சபையின் மக்கள் அனைவரையும், ஞானத்தோடும் விவேகத்தோடும் வழிநடத்தும் வலிமையை எம் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் தொடக்கமே இறைவா,
  உலகிற்கு வாழ்வளிப்பதற்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த இயேசுவில் இந்த உலகம் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் நிலை வாழ்வை மக்கள் அனைவரும் பெற்று மகிழவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் பிறப்பிடமே இறைவா,
   எங்கள் நாட்டு மக்களும், தலைவர்களும் உமது அன்பின் அரசை விரும்பித் தேடவும், அதன் மூலம் நீர் வழங்கும் அருள்வாழ்வைப் பெற்று நீதியிலும் அன்பிலும் உண்மை நெறியிலும் வளர்ச்சி காணவும்
துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. குணமளிக்கும் மருத்துவரே இறைவா,
   உலகெங்கும் புரிந்துகொள்தல், ஏற்றுக்கொள்தல், விட்டுக்கொடுத்தல், அன்புசெய்தல், அரவணைத்தல், பரிவுகாட்டுதல், நீதியை நிலைநாட்டுதல், பிறரை மதித்தல், உண்மைத் தேடுதல், அமைதி ஏற்படுத்துதல் போன்ற நன்மைகளுக்கு எதிரான நோய்களால் பாதிக் கப்பட்டுள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மைகளின் நாயகரே இறைவா,
  நிலைவாழ்வின் உணவாகிய உம் திருமகன் இயேசுவை உட்கொள்ளும் எம் பங்குத் தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமக்குகந்த நேரிய வழியில் ஞானத்தோடு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.