Wednesday, August 29, 2012

செப்டம்பர் 2, 2012

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு தேவையற்ற மனித மரபு களில் இருந்து விலகி கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தூயவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனித உள்ளத்தின் விளைவுகளாகிய கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல்களில் இருந்து விலகி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கு தந்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளைப் பின்பற்றி வாழுமாறு ஆண்டவர் நம்மைத் தூண்டுகிறார். உடலின் தூய்மையை விட உள்ளத்தின் தூய்மையையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என் பதை இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார். நம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் தூய எண்ணம் கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், ஆண்டவர் அளித்த நியமங்களின்படி நடக்க இஸ்ரயேல் மக்களை மோசே உற்சாகப்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் கட்டளை படி நடப்போர் ஆண்டவர் வாக்களித்த நாட்டை உரிமையாக்கி கொள்வர் என்ற வாக்குறு தியையும் இஸ்ரயேலருக்கு மோசே வழங்குகிறார். கடவுளின் கட்டளைகளே மக்களை அறிவிலும் ஞானத்திலும் சிறந்ததாக மாற்றும் என்ற தெளிவைப் பெற நாமும் அழைக் கப்படுகிறோம். நம் ஆண்டவர் நம்மோடு இருக்குமாறு அவர் தந்த கட்டளைகளை நம் வாழ்வில் கடைபிடித்து தூயவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி சாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். நிறைவான வரங்களும், நல்ல கொடைகளும் விண்ணகத் தந்தையாம் கடவுளிடம் இருந்தே வருகின் றன என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், உள்ளத்தில் ஊன்றப்பட்ட இறைவார்த்தைகளுக்கு ஏற்ப வாழுமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். தந்தையாம் கடவுளின் பார்வையில் தூயதும் மாசற்றதுமான வாழ்வு வாழ்ந்து, மீட்படையும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மீட்பின் ஊற்றாம் இறைவா, 
   உம் திருச்சபையை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துற வறத்தார் அனைவரும், உமக்கு உகந்த தூய வாழ்வு வாழவும், மக்கள் அனைவருக்கும் மீட்பின் கருவிகளாகத் திகழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் பிறப்பிடமாம் இறைவா,
  உலகின் பல நாடுகளிலும் நீதியின்றி அடக்கி, ஒடுக்கப்படும் மக்கள் மீது இரக்கம் காட்டி, உமது அன்பையும் அரவணைப்பையும் பெற்றவர்களாய் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற் றில் பங்குபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் உறைவிடமாம் இறைவா,
 
எங்கள் நாட்டு மக்களும் தலைவர்களும் உண்மை கடவுளாகிய உமது அன்பை உண ரவும், உமது கட்டளைகளின்படி வாழ்ந்து இந்த நாட்டை வளப்படுத்தவும் தேவையான அருளுதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வரங்களின் வள்ளலாம் இறைவா,
  
கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல் களின் பிடியில் சிக்கித் தவிப்போர் அனைவரும், உமது அருளால் நன்மைத்தனத்திற்குரிய தூய எண்ணங்களைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. தூய்மையின் நிறைவாம் இறைவா,
   இயேசுவின் கட்டளைகளுக்கு ஏற்ப மனித மரபுகளிலிருந்து விலகி, உம்மையும் பிற ரையும் அன்பு செய்து தூயவர்களாய் வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோ தரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.